தலைப்பை படிச்சுட்டு இந்தப் பய அரசியல் பத்தி எழுதி இருக்காண்டோய்'னு நெனச்சுராதீங்க மக்களே!. அழுகுன முட்டைல ஆம்லெட் போடுற ஆள் நம்ம இல்ல. சரி, மேட்டருக்கு வருவோம். என் வாகன புராணம்தான் இந்தக் கட்டுரை.
பதினொன்னாவது படிச்சிட்டு இருந்தேன். பய, பஸ்ல ஸ்கூலுக்கு போறானேன்னு ஒரு 'கேப்டன்' சைக்கிள் தானமாக் கொடுத்தாரு எங்கப்பா. ராவும் பகலும்.. சைக்கிளைச் சுத்தியே ஓடி வந்துக்கிட்டு இருந்துச்சு மனசு. பின்ன சும்மாவா? 'ப்ளைட்டு பொம்மை' வச்சு வெளயாண்டு கிட்டு இருந்தவன்கிட்ட, 'பேரமவுன்டு ஏர்வேஸயே' ஒப்படச்சா? சும்மா றெக்கை கட்டித் திரிஞ்சேன்..
அருப்புக்கோட்ட தெரு ஒவ்வொன்னையும் அந்தச் சைகிள்ளதான் அளந்து வந்தேன். எங்கப்பா, அம்மாவோட சேத்து.. அந்தச் சைக்கிளும் என் சேட்டை எல்லாம் பாத்துகிட்டே இருந்துச்சு. அப்படியாப்பட்ட சைக்கிளுக்கு வந்த சிக்கல் தான் என் விக்கலுக்கு காரணமாப் போச்சு.
எங்கயாவது, சக்கரத்துக்கு பதிலா சமோசா, ப்ரேக்குக்கு பதிலா பிரியாணி தந்து கேள்விப்பட்டிருக்கீங்களா? எனக்குச் செஞ்ஞாங்ய. ஒவ்வொரு தீபாவளிக்கும் ஊருக்கு போறது வழக்கம். எப்போ போனாலும், நம்ம கேப்டன் கூட மதுரைய சுத்த ஆரம்பிச்சுருவேன்.
தீபாவளி காலையில, குளிச்சு கிளிச்சு.. ஊர் சுத்தக் கெளம்புறப்பதான் தெரிஞ்சது கேப்டனக் காணோம். பல்லு வெளக்குற மாதிரி பதமாக் கேட்டேன் எங்கம்மாகிட்ட. மைசூர் பாகு டப்பா ஒன்னக் குடுத்து தின்னச் சொன்னாங்க. நல்லா இருக்குன்னு வேற சொல்லித் தொலைஞ்சேன். அதாண்டா இதுன்னுச்சு அம்மா. எதுன்னு கேக்குறப்பவே,, அந்த ஆறாவது அறிவு அதுதான்னுது. என்ன அறிவு இருந்து என்ன புண்ணியம்? நேசிச்சது நாசமாப் போனத நம்புறதுக்கு எக்ஸ்டர்னல் ஹார்டு டிஸ்க்கு மாதிரி எதையாவது ச்சொருகி யோசிச்சாதான் உண்டு.
அடப் பாவிகளானு கதற முடியல. நூறு நூறா கனவைப் பொதச்சு வச்ச நண்பன வெறும் நூத்தியம்பது ரூவாய்க்கு வித்துட்டாங்க்ய. வித்தது பத்தலேனு பாக்கெட்டோட ஸ்வீட்ட வேற நீட்டுறாங்ய. சரிதான்னு விட முடியல. யாருக்கு வித்தேன்னு கேட்டு, அவன் வீடு வரைக்கும் ஒரு நடை போய் வந்தேன். என்னத்தச் சொல்ல? ரெண்டு மூணு பூட்டப் போட்டு சன்னல்ல கட்டி வச்சிருந்தான். தொட்டுப் பாத்துட்டு,, இவிங்களால பூட்டுப் போட முடிஞ்சது என் சைக்கிளுக்கு மட்டும்தான்னு நெனச்சு கெளம்பி வந்தேன். அன்னிக்கு நைட்டும் நான் வெளில போய் வண்டியப் பாத்துட்டு வந்ததா அம்மா சொல்லக் கேட்டேன். கனவுல!!. இன்னிக்கும் அதே சைக்கிள் வந்து போகுது கனவுல, கேரியர்ல எவனோ கட்டி வச்ச மைசூர் பாகு பாக்கெட்டோட......................
எங்கியோ போற ஓணான எடுத்து வேட்டிக்குள்ள விடுறதும்பாங்யளே.. அப்படி ஒன்னு எக்ஸ்செல் சூப்பெர் வடிவத்தில நடந்தது. அதப் பத்தி அடுத்த பதிவு சொல்லும். என்ன பண்றது? சொப்புச் சாமான்ல இருந்து சொந்த சைக்கிள் வரைக்கும் பதிவு பண்ண வேண்டியது நெறைய இருக்கு.
--கார்த்திக்
25 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

4 கருத்துகள்:
சேரல் தான் உங்களை எனக்கு அறிமுகம் செய்தான்.
'கேப்டன்'ல இருந்து கெட்ட கனவு வரைக்கும்... தலைப்பைப் பார்த்தவுடனே கிளம்பிடலாம்னு நெனச்சேன். எதுக்கும் ஒரு வரியாவது படிப்போமுன்னு முழுசா படிச்சிட்டேன். நல்லா இருக்கு. ஆனால் இன்னும் கொஞ்சம் Clarity வேணும்.
லா.சா.ரா, அ.முத்துலிங்கம் போன்ற பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் கூட தங்களுடைய எழுத்துக்களில் சைக்கிளை பற்றி மறக்காம எழுதி இருக்காங்க.
தொடர வாழ்த்துக்கள்.
நன்றி கிருஷ்ணா..
ப்ரியமுடன்..
--கார்த்திக்
:-)..
//என்ன அறிவு இருந்து என்ன புண்ணியம்? நேசிச்சது நாசமாப் போனத நம்புறதுக்கு எக்ஸ்டர்னல் ஹார்டு டிஸ்க்கு மாதிரி எதையாவது ச்சொருகி யோசிச்சாதான் உண்டு//
உக்காந்து யோசிப்பீங்களோ இந்த மாதிரி உவமை எல்லாம்?
நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்.. சோகம் கூட சொகமாய்..
:) நன்றி!
கருத்துரையிடுக